மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருகையை பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருகை பதிவேடு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் அவர்கள் பணிபுரியும் நேரத்தை Nrega என்ற National Mobile Monitoring System App மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பணியாளர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றும் பதிவு செய்யபடுகிறது. இதனால் இந்தத் திட்டத்தில் முறைகேடு ஏற்படுவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.