வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சாந்தோம், அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல பாரிமுனை சென்று அங்கிருந்து பஸ் மூலமாகவோ, ரெயில் மூலமாகவோ செல்கின்றனர். மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமத்தினரும் போக்குவரத்துக்கு 2 அல்லது 3 வாகனங்கள் மாறி சென்று வருகின்றனர். எனவே திருவொற்றியூரில் இருந்து கோவளத்துக்கு நேரடி பஸ் வசதி தொடங்க வேண்டும் என்று திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.சங்கரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர் இதுபற்றி முதல்-அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின்படி, திருவொற்றியூரில் இருந்து கோவளம் வரை 100 மீனவ கிராமங்களை இணைக்கும் புதிய வழித்தடத்தில் புதிய பஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இது சுங்கச்சாவடி, ராயபுரம், பாரிமுனை, தலைமைச் செயலகம், கண்ணகி சிலை, நொச்சிக்குப்பம், பட்டினப்பாலை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பிஜேபி வழியாக கோவணத்தை சென்றடையும். இதற்கு 48 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.