100 ரூபாய் பணத்தை திரும்ப கேட்டதால் கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி ஆனந்தா நகரில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் அதே பகுதியில் மற்றொரு கட்டிட தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவடி காமராஜர் நகரில் நடக்கும் வீடு கட்டுமான பணிக்காக பூபதி சிவக்குமாரை அழைத்து சென்றுள்ளார். அப்போது சாப்பாட்டு செலவுக்காக பூபதியிடமிருந்து சிவகுமார் நூறு ரூபாயை வாங்கியுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து இருவரும் மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
அதன்பின் தான் கொடுத்த 100 ரூபாயை தா ௭ன பூபதி சிவகுமாரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சிவகுமார் இரும்புக் கம்பியால் பூபதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதன்பின் பூபதி மரக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சிவகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் படுகாயமடைந்த சிவகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிவகுமாரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சிவகுமார் தாக்கியதால் பூபதியின் தலையில் 4 தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.