இந்தியா நூறு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்ததற்கு ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியில் இருக்கும் ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது, ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா வோன் டெர் லேயன் நரேந்திர மோடியை நேற்று சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் பருவநிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, பிராந்தியத்திற்கான முன்னேற்றம் மற்றும் வர்த்தக முதலீடு உறவுகள் போன்றவை தொடர்பில் ஆலோசித்துள்ளனர்.
அப்போது, 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மக்களுக்கு செலுத்தி சாதனை படைத்த இந்தியாவிற்கு ஐரோப்பிய கமிஷன் தலைவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, கொரோனா தடுப்பூசியில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்திருப்பது, மற்றும் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியை ஆரம்பித்ததற்கும் இந்தியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுக்க தடுப்பூசிகளை செலுத்தி, உலக அளவில் கொரோனோவை வெல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.