100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.61,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊரக, நகர பகுதிகளில் சுகாதார நல மையங்கள் மேம்படுத்தப்படும். சுகாதார துறையில் பொது செலவின தொகை அதிகரிக்கப்படும். மக்கள் சுகாதார பரிசோதனை மையங்கள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்படும்.
ஐ.சி.எம்.ஆர் மூலம் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். சுகாதார திட்டங்களுக்கான செலவினங்கள் மேலும் அதிகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுநோய் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். வட்டார அளவில் பொது சுகாதார மையங்கள் அமைக்கப்படும். இதற்காக சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும் இதுவரை மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகங்களுக்கு 90 ஆயிரம் கோடி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க 3500 கோடி,முத்ரா கடனுதவி திட்டங்களுக்கு 1500 கோடி, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்க 5000 கோடி நபார்டு வங்கிகளுக்கு 30 ஆயிரம் கோடி, உணவுப் பொருள் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி, நபார்டு வங்கிகளுக்கு 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.