கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் அச்சமின்றி தடுப்பு விதிமுறைகளை தளர்வு படுத்தியதால் நோய்தொற்று அதிகரித்துள்ளது என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போடப்படும் தடுப்பூசி 100% செயல் திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும். ஆனால் உடலில் உள்ள ஆன்டிபாடிகள் அந்த வைரஸை பல்கிப் பெருக அனுமதி அளிக்காது. குறைந்த அளவில் மட்டுமே நோயின் தாக்கம் இருக்கும். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு பலவகை காரணங்கள் இருக்கின்றன. அதாவது ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பிறகு பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா அச்சமின்றி தடுப்பு விதிமுறைகளை தளர்த்திவிட்டு பின்பற்றாமல் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவத் தொடங்கியது.
அந்த நேரத்தில் அதிக அளவில் மத நிகழ்வுகள் நடைபெற்றன. தேர்தல் சம்பந்தமாக கூட்டங்கள், பிரசாரம் நடைபெற்று வந்தது. மத உணர்வை பாதிக்காத வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இதை நாம் கட்டுப்பாட்டுக்குள் செய்ய முடியும். கொரோனா 6-7 மாதங்களுக்கு முன்பு இருப்பதைவிட டெல்லியில் இப்போது பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.