முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு திடீரென்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து அலுவலகத்திற்குள் புகுந்து முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில், “கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம் என்பவர் மீது பள்ளி கட்டணம் வசூல் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் மீது விசாரணைக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தலைமையாசிரியர் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து வாக்கு வாதம் செய்கின்றனர். தொடர்ந்து அவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் அலுவலகத்திற்கும் அலுவலக ஊழியர்களுக்கும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று காவல்நிலையத்தில் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார். இதனால் அரசு கல்வி அலுவலகம் முன்பு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கோவை முதன்மை கல்வி அலுவலர் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.