100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் ஏழு வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்தவாறு ஆட்டோவை இழுத்து சென்றுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்தி மைதானத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ஸ்கேட்டிங் செய்தவாறு 7 வயது சிறுமி ரவீனா என்பவர் ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது ரவீனா ஸ்கேட்டிங் செய்தபடி ஆட்டோவை கயிறு கட்டி சுமார் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளார். அதன்பின் சிறுமியை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் கனகராஜ், பாக்யராஜ், அந்த சிறுமியின் பெற்றோர் விஜயம், ரம்யா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.