உடைந்த நிலையில் இருந்த ஆயிரம் ஆண்டு கால பழமையான அய்யனார் சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர் குடிவயல் கிராமத்தின் கண்மாயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீரனூர் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கூறும் போது இரண்டாக உடைந்த நிலையில் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் உடையதாகும். பொதுவாக அய்யனார் சிலைகள் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டபடி இந்த சிற்பம் அமைந்துள்ளது.
இவ்வாறு கால் மாற்றிய நிலையில் அய்யனார் அமர்ந்துள்ள சிற்பங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இது 9-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்களின் கால பறவை சிற்பமாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதுபோன்று உடைந்த நிலையில் காணப்படும் சிற்பங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.