சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் இவரின் உத்தரவின் படி காவல்துறையினர் தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.