போராட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தினால் 1000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். மேலும் 2000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.
ராஜினாமா முடிவை அறிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள் வரும் ஒன்பதாம் தேதி முதல் பணிக்கு வர போவதில்லை என தெரிவித்திருக்கிறார்கள். இதனால் 13 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. இதில் காந்தி மருத்துவக் கல்லூரியுடன் இயங்கிவரும் மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 3000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.