தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் 122 வருடங்களாக இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதேபோன்று தரங்கம்பாடி பகுதியும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு செய்தார். அதன் பிறகு சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையை நியாய விலை கடைகளின் மூலம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி நவம்பர் 24-ம் தேதி முதல் நியாய விலை கடைகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் வழங்கினால் மட்டும் நிரந்தர தீர்வாகாது. இதனால் அரசுக்கு நிதி சுமை தான் ஏற்படும். எனவே மழையால் பாதிக்கப்படாத அளவுக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.