ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான அளவுக்கு ஏற்றார்போல ஒரு லட்சம் டன் வரை வெங்காயம் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மத்திய அரசு நிறுவனமான எம்.எம்.டி.சி 4 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்கிறது. இதை தொடர்ந்து வேறு எங்கு வெங்காயம் சரியான விலையில் கிடைக்கிறதோ… அங்கு இருந்து இறக்குமதி செய்யலாம். இதன் மூலமாக இந்திய சந்தையில் வெங்காய வரத்து அதிகரிக்கும், இதனால் விலை குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து இருப்பதன் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை காரணமாக அறுவடை செய்ய முடியவில்லை என்றும், வெங்காயம் பயிர் அழிந்துவிட்டது என்றும் விவசாயிகள் புகார் அளித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான் வெங்காயத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே தற்போது இறக்குமதி மூலம் சந்தையிலே வெங்காய வரத்து அதிகரிப்பதற்காக மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.