காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கிடையில் ராகுல்காந்தியை அழிக்க நினைத்த பா.ஜ.க-வின் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது” என தெரிவித்தார்.
ராகுலின் இந்த பாதயாத்திரை 8 மாநிலங்கள் வழியாக 2 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் கடந்து இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் துவங்கியுள்ளது. அதன்பின் வருகிற 24ம் தேதியன்று டெல்லியை சென்றடைய இருக்கிறது. அதனை தொடர்ந்து 8 நாட்கள் இடைவெளிக்கு பிறகு உத்தரப்பிரதேசத்திலிருந்து மீண்டும் பாதயாத்திரை துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.