உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அங்கு வசிக்கும் இந்தியர்களை “ஆபரேஷன் கங்கா” என்ற திட்டம் வகுத்து மத்திய அரசு விமானங்களை அனுப்பி தாயகம் அழைத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக மாணவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் மீட்பு பணியை கண்காணிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திருச்சி சிவா எம்.பி. தலைமையிலான குழுவினர் டெல்லியில் சென்று முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இருருப்பதாவது, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தலைமையில் எம்.பி.க்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வெளிநாடுவாழ் இந்தியர்கள் கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ், மேலாண்மை இயக்குனர்கள் ஏ.கே.கமல் கிஷோர், கோவிந்தராவ், இணை மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ் போன்றோர் கடந்த 5-ஆம் தேதி டெல்லி சென்றனர்.
இந்நிலையில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து தமிழக மாணவர்களை தாயகம் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்துதருமாறு கேட்டுக்கொண்டனர். இக்குழுவினர் டெல்லியில் தங்கி இருந்து மாணவர்களின் மீட்பு பணியை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் உக்ரைனில் இருந்து வருகை புரியும் மாணவர்களை உடனுக்குடன் தமிழகத்திற்கு தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
தற்போது உக்ரைனிலிருந்து டெல்லி வரும் மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உட்பட தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதுவரையிலும் உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்த 1,011 மாணவர்களில் 852 மாணவர்கள் (தனி விமானத்தில் 180 மாணவர்கள் உள்பட) தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 159 மாணவர்களுக்கான விமானம் டிக்கெட்டுகளானது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களை சிறப்பு குழுவினர் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். தமிழகத்திற்கு செல்ல அணைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.