சென்னையில் சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார்.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தங்கத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்து இருந்தனர்.
லாக்கரில் வைக்கப்பட்ட 400 கிலோ தங்கத்தில், 103 கிலோ மாயமானது தொடர்பான புகாரின்பேரில் சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கில் நேரில் விசாரணை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.