மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகின்றது.
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய தொடக்க ஜோடி ஹீலி – மோனி ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது . தொடக்க முதலே சிக்ஸர் , பவுண்டரி என பறக்க விட்ட இந்த ஜோடியால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் குவித்து அசத்தியது.
ஹீலி 39 பந்துகளில் 7 பவுண்டரி , 5 சிக்சருடன் 75 ரன் அடித்து ஆட்டமிழக்க, மோனி 54 பந்தில் 10 பவுண்டரி அடித்து 78* ரன்னுடன் இறுதி வரை களத்தில் நின்றார்.இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டும் , பூனம் யாதவ் , ராதா யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்த அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.
மேகன் சுட் வீசிய முதல் ஓவரின் 3ஆவது பந்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். பின்னர் களமிறங்கிய தனியா பாட்டியா தலையில் பந்து பட்டு வெளியேற ஜெமிமாஹ் டக் அவுட்டில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய மந்தனா 11 ரன்னிலும், இந்திய அணி கேப்டன் கவுர் 4 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 30 ரன்னில் 4 முன்னணி வீரர்களை இழந்து திணறியது. பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேதா கிர்ஷ்ணமுர்த்தி 19 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்களின் வெற்றி நம்பிக்கை வெறும் கனவாக மாறியது. மிரட்டலான பந்து வீச்சை வீசிய ஆஸி அணியினரால் இந்திய ரசிகர்களின் சாம்பியன் கனவு கலைந்தது.
15 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்க்கு 81 ரன் எடுத்து திணறி வருகின்றது. தீப்தி சர்மா28* ரன்னுடனும் , ரிச்சா கோஷ் 10* ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஜெஸ் ஜோனஸ்ஸன் 2 விக்கெட்டும் , சுட் , மொலினீஸ், கிம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இன்னும் 30 பந்துகளில் 104 ரன்கள் எடுக்க வேண்டுமென்பதால் இந்திய அணியின் உலக கோப்பை கனவு கலையும் நிலையிலே உள்ளது.