இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்மாபட்டி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பூமாரியம்மன் பூச்சொரிதல் விழா குழு மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் சுபாஸ்ரீ, ஷாலினி, சிவானி, வாசுதேவ், ஜித்து நாயர், அஜித், செவிலியர்கள், ஒருங்கிணைப்பாளர் வினோத நாதன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இந்த முகாமில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், திருவிடையார்பட்டி, காட்டாம்பூர், காரையூர், உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து 515 பேர் கலந்து கொண்டனர்.
அதில் 106 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டு அவர்களை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து 270 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண்ணாடி மற்றும் மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் முத்துமாணிக்கம், செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் பழனி குமார் ஆகியோர் செய்துள்ளனர்.