திண்டுக்கல்லில் 107 வயது முதியவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பழையூரில் சின்னப்ப உடையார் (107) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவருடன் நேற்று சிறுமலை துறையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அதன்பின் அவர் ஆதார் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை காண்பித்து வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
இது குறித்து அந்த முதியவர் கூறும்போது, நேரம் தவறாமல் தினமும் அளவான சாப்பாடு சாப்பிட வேண்டும். உறவினர்களின் அன்பான கவனிப்பு, நிறைவான தூக்கம் ஆகியவற்றால் இளைஞர் போல் இன்னும் வாழ்ந்து வருகின்றேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலையும் கண்டிப்பாக சந்திப்பேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.