10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற நாளை முதல் சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15ம் தேதி நடைபெறவுள்ளது. 11ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்திற்கான பொதுத் தேர்வுகள் 16ம் தேதி நடைபெறவுள்ளன. அதன் தொடர்ச்சியாக 12ம் வகுப்பின் கடைசி பாட தேர்வை எழுதாமல் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நாளை முதல் 13ம் தேதி வரை 63 வழித்தடங்களில் 109 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஒரு பேருந்தில் 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களிடம் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும், ஆசிரியர்களும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.