10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் பொதுத்தேர்வை ரத்து செய்ய ஸ்டாலின் மற்றும் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.
மேலும், தேர்வு மையங்களுக்கு மாணவர்களை இ-பாஸ் முறையில் அழைத்து வருவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுகள் நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.