கோவில் திருவிழாவில் பத்தாம் வகுப்பு மாணவன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வன்னி கொன்னு பகுதியில் அம்புலிகுமாரின் குடும்பம் வசித்து வருகின்றனர். இவரது மகன் அபிமன்யு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு தனது நண்பர்களுடன் அபிமன்யு அங்கு சுற்றித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் அபிமன்யுவின் அருகில் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு கோபமடைந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அபிமன்யுவின் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து அபிமன்யு சம்பவ இடத்திலேயே பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆலப்புழா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவரை எதற்காக கொலை செய்தனர்? யார் கொலை செய்தனர்? என்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அபிமன்யுக்கும் அதே பகுதியை சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே சென்ற வாரம் நடந்த மற்றொரு கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது அவர்களை அபிமன்யு தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அபிமன்யு மீது இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.