குத்துசண்டை பயிற்சி அளிப்பதாக கூறி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிபி. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே சமயத்தில் கோவைபுதூர் ராமநாதபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உதவி பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பத்தாம் வகுப்பு மாணவி குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ள வந்துள்ளார்.
இந்நிலையில் குத்துச் சண்டைப் பயிற்சியை காரணமாக வைத்துக்கொண்டு மாணவியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டான் சிபி. மேலும் தான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார். பின் மாணவியை தன் ஆசைக்கு இணங்கும்படி புகைப்படம் காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழ, அவர்கள் கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.