11 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் தயார் செய்யப்பட்ட 16 1/2 கிலோ ஷவர்மாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட தேவ நந்தா(16) என்ற சிறுமி உயிரிழந்த நிலையில், 50-க்கும் அதிகமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷர்மா, பிரியாணி தயாரிக்கும் அசைவ ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சரவணம்பட்டி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் சரவணம்பட்டியில் இருக்கின்ற ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ரோட்டின் ஓரம் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு சான்று, உரிமம் பெற்று கடையை நடத்தபடுகிறதா? ஷவர்மா தயாரிப்பு சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து ஷவர்மாவை நன்றாக வேகவைத்து அதன்பின் விற்கவேண்டும். திறந்தவெளியில் வைத்து ஷர்மாவை தயார் செய்யக்கூடாது. அன்றாடம் எவ்வளவு தேவையோ அதற்கேற்ப இறைச்சியை கொள்முதல் செய்யவேண்டும். கொள்முதல் செய்த அனைத்தையும் அன்றைய தினமே முழுவதுமாக பயன்படுத்திட வேண்டும் என்று எச்சரித்தனர். இந்த ஆய்வில் 11 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் தயார் செய்யப்பட்ட 16 1/2 கிலோ ஷவர்மா பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு ரூ 2,000 அபராதம் விதிக்கப்பட்டன. இதனை அடுத்து 11 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விட்டனர்.