மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு தற்கொலைகள் குறித்த தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் கடந்த ஆண்டு 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாளொன்றிற்கு சராசரியாக 418 தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஆனால் தற்பொழுது இதைவிட அதிகமாகி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 19 ஆயிரத்து 909 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ்நாடு 16 ஆயிரத்து 883 தற்கொலைகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. மொத்த தற்கொலையில் 50.1 சதவீத தற்கொலைகள் மேற்கூறிய 5 மாநிலங்களிலும் நடந்தேறியுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 16.9 விழுக்காட்டினரைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் தற்கொலை விகிதம் 3.1 விழுக்காடாக குறைந்து காணப்படுகிறது.
மொத்த தற்கொலைகளில் 11 சதவீதம் தமிழ்நாட்டில் நடக்கிறது. யூனியன் பிரதேசங்களில் டெல்லியில் 3,142 பேரும், புதுச்சேரியில் 408 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்தவர்களில் 70.9 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 29.1 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். மேலும் 33.6 சதவீத தற்கொலைகள் குடும்பப் பிரச்சனைகளால் நிகழ்கின்றன. தற்கொலைக்கு திருமணம் மற்றும் நோய் தொடர்பான பிரச்சனைகளும் முக்கிய காரணங்களாக உள்ளன.