11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே இருக்கும் சுருளகோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 13 வருடங்களுக்கு முன்பாக தனது மாமன் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 11 வயதில் மகள் இருக்கின்றார். அவர் கணவரை விட்டு பிரிந்து நாகர்கோவிலை சேர்ந்த நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள அவரையும் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக பிரிந்தார்.
இதையடுத்து பத்து மாதங்களுக்கு முன்பாக தக்கலில் இருக்கும் மேலத்தெருவில் கொத்தனாராக வேலை செய்யும் சுனில் ஜாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருவரும் தனியாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றார்கள். இவர்களுடன் ஆறாம் வகுப்பு படிக்கும் மகளும் தங்கி படித்து வருகிறார். அந்த இளம்பெண் துணிக்கடைக்கு வேலைக்கு சென்று வருகின்ற நிலையில் சிறுமி விடுமுறை காரணமாக வீட்டில் தனியாக இருந்த பொழுது சுனில் ஜாய் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கின்றார்.
மேலும் சிறுமியுடன் வெளியே சொன்னால் உன்னையும் உனது அம்மாவையும் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கின்றார். சிறுமி இதைப்பற்றி யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக சிறுமி அவரின் பாட்டியிடம் இதைப் பற்றி கூறி கதறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த சுனில் ஜாய் தலைமறைவாகி இருந்ததையடுத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று மாலை மணலிக்கரையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சுனில் ஜாய்யை போலீசார் கைது செய்தார்கள்.