தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தையில்லாமல் இருந்தது. அதன் பிறகு சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் தீபாவுக்கு வாடகை தாய்முறையில் குழந்தை பிறந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். ஆனால் என்ன குழந்தை என்று இப்போது கூற விரும்பவில்லை.
சரியான நேரம் வரும்போது எங்களுடைய குழந்தை பற்றிய அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம். எனவே யாரும் பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தீபா கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தீபா நேற்று தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது பற்றி தீபா கூறியதாவது, எங்களுக்கு 11 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்துள்ளது. எனக்கு செயற்கை கருத்தரித்தல் முறையில் என்னுடைய அம்மாவின் ஆசி, அத்தையின் ஆசி மற்றும் என்னுடைய கணவரின் அன்பினால் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி எங்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், நாங்கள் எங்களுடைய உறவினர்களிடம் கலந்து ஆலோசித்து குழந்தை பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று காத்திருந்தோம். என்னுடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியான தகவலை நாங்கள் கூறியுள்ளோம். மேலும் பல வருடங்கள் கழித்து எனக்கு குழந்தை பிறந்துள்ளதால் எங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்