தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருத்துவர் சொக்கலிங்கம் குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினார்.
வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக காவல் துறைக்கு புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும் அப்பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.