நாட்டுப்புற நாடக கலைஞராக இருந்து தமிழ் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1908ஆம் ஆண்டு சுடலைமுத்து-இசக்கியம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கல்வியை முழுமையாக சுவைக்காமல் நான்காம் வகுப்பு வரை மட்டுமே கற்றார் கிருஷ்ணன்.
கல்வியறிவு மட்டுமே மனிதனை செதுக்குவதில்லை என்பதை உணர்ந்த அவர், நாடக கொட்டகைகளில் ஆரம்ப காலத்தில் தின்பண்டங்கள் விற்று குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவிவந்தார். காலத்தின் போக்கில் பயணித்த கிருஷ்ணன் நாடகக் கலையால் ஈர்க்கப்பட்டு பின்னாளில் தன்னை ஒரு நாடக நடிகனாக மாற்றிக்கொண்டார். கலைத் திறமையும், அசாத்தியமான நடிப்புத் திறனாலும் மக்களுக்கு கலை விருந்து கொடுத்துவந்த அவர், நகைச்சுவையை திகட்டாத கருத்துக்களால் இனிதே வழங்கி மக்களை சிந்திக்க வைக்கவும் செய்தார்.
நகைச்சுவை மட்டும் என்று ஒதுங்கிவிடாமல் அதன் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் பாத்திரமாக விளங்கினார். நாகம்மாள், மதுரம், வேம்பம்மாள் ஆகிய மூவரை வெவ்வேறு காலகட்டங்களில் மனம் முடித்துக்கொண்ட கிருஷ்ணன் பல படிநிலைகளைக் கடந்து சீரிய சிந்தனையாளராகவும், திரையுலகின் நகைச்சுவை நட்சத்திரமாகவும் வலம் வந்த அவர், 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்துவைத்தார்.
சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த கிருஷ்ணன், நகைச்சுவை வழியே சமூகத்திற்கு முற்போக்கு கருத்துக்களை திகட்டாமல் ஊட்டினார். பைத்தியக்காரன், நல்ல தம்பி, பணம், கண்ணின் மணிகள், சக்கரவர்த்தி திருமகள், அம்பிகாபதி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கலையுலக ஜாம்பவானாக கோலோச்சியிருந்தார்.
பல நாடகங்களை இயற்றியிருந்த கிருஷ்ணன், திரைப்படத் துறையில் இயக்குநராகவும், பாடகராகவும் வலம்வந்தார். பணம், மணமகள் ஆகிய படங்களையும் இயக்கியிருந்த அவர், ஆசையாக பேசிப் பேசி, கண்ணா கமலக் கண்ணா, காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
சிரிப்பால் சிந்திக்கவைத்து நகைச்சுவை விருந்து படைத்த இவருக்கு “கலைவாணர்” என்ற கவுரவத்தை வழங்கி 1947ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகம் சிறப்பித்தது. திரையுலகின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்து மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த கலைவாணர் கிருஷ்ணன், 1957 ஆகஸ்ட் 30ஆம் நாள் தனது 49ஆவது வயதில் காலமானார்.
திரைத்துறை இன்று அபார வளர்ச்சி கண்டிருந்தாலும், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டுகள் கடந்து பெருமையோடு நினைவுகூறப்படும் அற்புதக் கலைஞராக மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.