கேரளாவில் 114 நாட்களாக இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாநில மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலே முதலில் கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதனையடுத்து தான் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதியாகியது. இப்போது வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.20 லட்சத்தை கடந்துள்ளது. 3,600க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்த சூழலில் தான் கேரளாவிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாக கண்டறியப்பட்டு வருகின்றது. அங்கு மட்டும் இதுவரை 732 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒருநாள் மட்டும் அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 30ஆம் தேதி அங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சீனாவில் படித்து வந்த அவரை தொடர்ந்து பிப்.2 , 3 ஆகிய 2 நாட்களும் தலா 1 என்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 3 பேருமே சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள்.
இதையடுத்து இவர்கள் மூன்று பேருக்கும் சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டு 3 பேரும் குணமடைந்ததும் வீடு திரும்பினர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்டதையடுத்து மார்ச் 9ஆம் தேதி கேரளாவில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் மார்ச் 27ஆம் தேதி மட்டும் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதான் ஒரே நாளில் அதிக பாதிப்பாக இருந்து வந்தது. அதே போல மார்ச் 30ஆம் தேதி 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் மார்ச் மாதம் வரை ஒரே நாளில் 39 என்ற எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் 1ஆம் தேதி 24 பேருக்கும், 2ஆம் தேதி 21 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் ஒரேநாளில் தொற்று கண்டறியப்பட்ட அதிகபட்சமாக எண்ணிக்கையாக 24 இருந்து வந்தது. அதை தொடர்ந்து வந்த மே மாத்தில் 18ஆம் தேதி 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 20,21ஆகிய இரண்டு நாட்களிலும் தலா 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
கிட்டத்தட்ட ஜனவரி 30 முதல் நேற்று வரை கிட்டதட்ட 113 நாட்களாக ஒரே நாளில் அதிகபட்சமாக 39 என்ற எண்ணிக்கையே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் 114ஆவது நாளான இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும், 21 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தற்போது வரை 732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 216 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏறக்குறைய 114 நாட்களுகளில் இன்று ஒரே நாளில் அதிகமானோர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.