அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்க சுமார் 116 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 34 மில்லியன் மக்கள் தடுப்பு ஊசி செலுத்த தகுதியானவர்கள். இதில் தற்போது வரை 63% மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே அதிகாரிகள், தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாளில் தடுப்பூசி செலுத்திய 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படவுள்ளது. அதற்கு அடுத்ததாக 30 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 50,000 டாலர் வழங்கப்படவுள்ளது.
இந்த 40 பேரை தவிர்த்து சுமார் 2 மில்லியன் நபர்களுக்கு தலா 50 டாலர்கள் பரிசுத்தொகை அளிக்கப்படவுள்ளன. இதற்கு முன்பே ஓஹியோ மாகாணம், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கியுள்ளது. மேலும் கொலராடோ, ஓரிகான் போன்ற மாகாணங்களிலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.