தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகிச் சென்றதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய தினம் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சென்னையில் நேற்று இதுவரைக்கும் 2020 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெப்பம் இருந்தது. மேலும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக, வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்ற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.
அம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகிச் செல்லும் போது தமிழகத்தில் இருந்த ஈரப்பதத்தை முழுவதுமாக எடுத்துச் சென்று விட்டது. இதனால் தற்போது வடக்கில் உள்ள நிலப் பகுதியில் இருந்துதான் காற்று வீசுகின்றது. ஈரப்பதம் இல்லாத காற்று வீசுவதால் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் தான் வரக் கூடிய அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரைக்கும் யாரும் வெளியே செல்ல வேண்டாம், பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தமிழக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.