செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அம்மா அவர்களை 28 ஆண்டுகாலம் நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொல்லிவிட்டோம், அந்த பதவியில் நாம் யாரும் அமரக்கூடாது என்கின்ற எண்ணத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்தோம். இரண்டு பேருக்கும் அந்த பதவிகள் வழங்கப்பட்டது. ஆறாண்டு காலம் கட்சியை வழிநடத்திய பிறகு சென்ற 7 -ம்தேதி டிசம்பர் மாதம் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர்,
– இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஒரே வேட்பு மனுவாக தாக்கல் செய்து, டெபாசிட் செய்து, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட பிறகு, இன்றைக்கு தன்னுடைய சுயநலத்திற்காக அண்ணா திமுகவை கையகப்படுத்துவதற்காக, ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல், அம்மா அவர்களுக்கு பிறகு யாரும் அந்த பொதுச்செயலாளர் பதவியில் இருக்க மாட்டோம் என்று சொன்ன பதவியில்,
பொதுச் செயலாளர் பதவியை கையகப்படுத்துவதற்காக ஒரு ஆயிரம் கோடி செலவு செய்து, 23ஆம் தேதி பொதுக்குழு என்றும், 11-ம் தேதி இவரது அடியார்களை வைத்து ஒரு பொதுக்குழு என்றும் நடத்தினார். அந்த இரண்டிலும் நடத்திய விதத்தை பார்த்து நீதிமன்றமே அந்த கூட்டத்தையும் ரத்து செய்தது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது, தற்காலிக பொதுச் செயலாளர் என்று எடப்பாடி சொன்னாரே, அவரே பட்டம் சூட்டிக்கொண்டாரே,
அந்த பதவியும் ரத்து செய்யப்பட்டது. உண்மையான ஒரு மனிதராக இருந்தால் சூடு, சொரணை எல்லாம் இருக்குமேயானால், இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் ? கட்சியில் நீதிமன்றம் சொன்ன பிறகு, நாம் அம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டோம் என்று கூறி, கட்சியை விட்டு வெளியே சென்று இருக்க வேண்டும், இல்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும்.
ஆனால் எந்த ஒரு வெட்கம் இல்லாமல், மானம் இல்லாமல், சூடு – சொரணை இல்லாமல் எடப்பாடி ஆகட்டும், கே.பி முனுசாமி ஆகட்டும், ஜெயக்குமார் ஆகட்டும், சண்முகம் ஆகட்டும் இன்னும் அவரோடு இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு இன்னும் இந்த கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் கட்சியை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று எல்லோரும் வரவேண்டும் என்று அழைத்த போது, நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்று சொன்னார்கள் என தெரிவித்தார்.