மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடாமல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது மிக ஆபத்தானது என்று டெல்லி துணை முதலமைச்சர் திரு.மணிஷ் சிசோடியா எச்சரித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் தொற்று அதிகரித்த நிலையில் சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்னும் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் குழப்பம் நீடிப்பதால் மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்க்கு மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி துணை முதலமைச்சர் திரு. மணிஷ் சிசோடியா பொதுத்தேர்வை நடத்துவதற்கு முன்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தனது ஆலோசனையை தெரிவித்தார்.
தடுப்பூசி போடாமல் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் பாதுகாப்புடன் விளையாடக் கூடிய செயல் என்று தெரிவித்த திரு. மணிஷ் சிசோடியா 12-ம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் 17 வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தடுப்பூசி போடலாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் பைஸர் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திரு. மணிஷ் சிசோடியா மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.