தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்கள் ஆல் பாஸ் வழங்குவதற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பரிசீலித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.