ஆத்தூரில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 2 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் வசித்து வரும் 17 வயது சிறுமி அங்கு இருக்கின்ற பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரிடன் விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை சென்னைக்கு அழைத்து சென்று அங்குள்ள மருத்துவமனையில் வைத்து கருவை கலைத்துள்ளனர். இதுதொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்பேரில் குழந்தை நல பாதுகாப்பு அதிகாரி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் புதுச்சேரி சேரன் நகரில் வசித்த 33 வயதுடைய திவாகரன். இவருடைய சொந்தக்காரரான ஆத்தூர் முல்லைவாடி வசித்த 43 வயதுடைய சங்கர் ஆகியோர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது.
மேலும் திவாகரன் வேலை தொடர்பாக ஆத்தூர் வந்திருந்தபோது அவருக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த திவாகரனின் சொந்தக்காரனான சங்கர் இந்த விஷயத்தை பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் திவாகரன், சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.