கேரளாவில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கேரள மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களை தவிர கோழிக்கோடு,வயநாடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களின் அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம். கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.