தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை குறைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளதையடுத்து தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய செய்தி குறிப்பு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் மற்றும் மாணவிகள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 12 வயதுக்கு மேல் 25 க்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆர்வமுள்ள 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் குரல், இசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம், போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தவில், நாதஸ்வரம், போன்ற கலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் நடைபெறும் இந்தப் படிப்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது பற்றிய விவரங்களை அறிய தலைமையாசிரியரை மாவட்ட அரசு இசைப்பள்ளி சவேரியார்புரம், சிலுவைபட்டி தூத்துக்குடி 2 என்ற முகவரியில், நேரிலும் 9487739296 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.