மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று இளந்தோப்புவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குழித்துறை பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை சிகிச்சைக்காக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் நடந்த சம்பவங்களை கேட்டுள்ளனர். அதன்பிறகு மாணவி நடந்த சம்பவம் குறித்த முழு விபரத்தையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் குமார் மீது குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.