வங்காளதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் திடீரென ஏசி வெடித்து சிதறியதால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா அருகே இருக்கின்ற நாராயண்கஞ்ச் என்ற நகரில் மூன்று அடுக்கு மாடிகளை கொண்ட மசூதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவே வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மசூதியில் இருந்த ஏசி திடீரென வெடித்து சிதறியது. அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து ஏ.சி.க்கள் அடுத்தடுத்த வெடித்து சிதறின. அதனால் குண்டு வெடித்தது போன்று மசூதியே முழுவதுமாக அதிர்ந்து போனது.
அதன் பின்னர் மசூதி முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. மசூதியின் 3 மாடுகளுக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ முழுவதுமாக கொழுந்து விட்டு எரிந்தது. அதனால் தொழுகையில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு அலறியடித்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றனர். ஆனால் மசூதி முழுவதிலும் தீ சூழ்ந்து கொண்டதால் சிலர் வெளியேற முடியாமல் மசூதியின் உள்ளே சிக்கிக் கொண்டனர். அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அனைவரும் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர். பல மணி நேரம் தொடர்ந்த போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் 36 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரில் 15 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
அதில் படுகாயமடைந்த மற்ற 21 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்து பற்றி தீயணைப்புத் துறையின் தலைமை அதிகாரி அப்துல்லா கூறுகையில், ” மசூதிக்கு அடியில் டைட்டஸ் வாயுக் குழாய் செல்கின்றது. அந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மசூதிக்குள் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம். மசூதியில் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருந்த நிலையில் யாராவது ஒருவர் ஏசியை அப்போது இயக்கி இருக்கலாம்.அதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டும் படுகாயமடைந்த அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா தனது ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் மாநில எரிவாயு பரிமாற்றம் மற்றும் விநியோக நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.