கொரோனாவால் சென்னையில் மட்டும் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்றுவரை 23 ஆயிரத்து 495 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு, 13 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 10 ஆயிரத்து 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு நாட்டிலே குறைந்த இறப்பு வீதத்தில் உள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளதில், அதிகபட்சமாக சென்னையில் 141 பேர் மரணமடைந்துள்ளது தலைநகர் வாசிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உயிரிழப்பு இழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக 13, 11 என்ற அளவில் இரட்டை இலக்கத்தில் இறப்பு பதிவாகியது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்திஉள்ளது. இதுவரை மூன்று முறை இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது 4ஆவது முறையாக இன்றும் உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் மட்டும் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனையில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.