தமிழகத்தின் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அரசு கூடுதல் கவனம் செலுத்துமா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் இதுவரை 12 வயதிற்கு உட்பட்ட 25 ஆயிரத்து 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தொற்று குறையத் தொடங்கியதால் கடந்த 20 முதல் 24 ஆம் தேதி வரை 12 வயதிற்கு உட்பட்ட ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. அதற்கு அடுத்த நாட்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரிசோதனைகள் குறைக்கப்பட்ட போதிலும் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரிப்பது குறித்து மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏபிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகமான பாதிப்புகளை அரசு குறைத்து காட்டுகிறதா என சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார். தனிமனித இடைவெளி குறித்த விழிப்புணர்வு குறைந்ததால் அதை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொடர்பான தமிழக அரசின் புள்ளி விவரங்களில் பல குளறுபடிகள் உள்ளதாக ஏற்கனவே பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்தும் கேள்வி எழுப்ப உள்ளதாக அவர் கூறி உள்ளார்