12 வயதான ஜூலியட் என்ற சிறுமி மரணத்தின் விளிம்புவரை சென்று கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வந்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெனிபர் டேலி தம்பதி மகன் மகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த குடும்பத்தின் மீது கொரோனாவின் பார்வை விழுந்துள்ளது. இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில் “எனது மகள் ஜூலியட்க்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமானதால் நியூ ஆர்லியன்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதாக கூறினர்.
ஆனால் இதுவரை இல்லாத அளவில் ஜூலியட் க்கு வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டது. வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டதோடு ஜூலியட் உதடு முழுவதும் நீல நிறமாக மாறியது. அது மட்டுமல்லாது அவளது கால்கள் முழுவதும் குளிர்ச்சியாக இருந்தன இதனால் எமர்ஜென்சி வார்டுக்கு எனது மகளை மருத்துவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் திடீரென ஜூலியட்க்கு நெஞ்சு வலி ஏற்பட சிபிஆர் (Cardiopulmonary resuscitation) செய்து எங்களது கடைசி நம்பிக்கையாக ஓச்ஸ்னர் மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர் கிளீன்மஹோன் எடுத்த முயற்சியினால் எங்கள் மகள் உயிருடன் எங்களுக்கு கிடைத்தாள். சுமார் பத்து நாட்கள் எங்கள் மகளை தொடர் கண்காணிப்பில் வைத்து பத்திரமாக பார்த்துக்கொண்டார் மருத்துவர். இதுகுறித்து மருத்துவரின் கிளீன்மஹோன் கூறுகையில், “கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஜூலியட் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவளது இதயத்தின் மேல் பகுதியும் கீழ் பகுதியில் ஒன்றாக இணைந்து சரியாக செயல்படவில்லை. இதனால் உடல் உறுப்புகள் பல கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கத் தொடங்கின.
கொரோனா தொற்று அறிகுறிகள் ஜூலியட் க்கு மிகவும் வித்தியாசமாக இருந்ததால் சிகிச்சை அளிப்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து சுவாசப் பிரச்சினையினால் அவதிப்பட்ட ஜூலியட் சுமார் நான்கு நாட்கள் வென்டிலேட்டர் வைத்திருந்தோம். மருத்துவர்களின் சிறந்த கவனிப்பால் வெகு விரைவாக சொந்தமாக சுவாசிக்கும் தன்மையை பெற்றாள் ஜூலியட். தற்போது கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுபட்டு ஜூலியட் புன்னகையுடன் வீடு திரும்பியுள்ளார்” என தெரிவித்தார். மேலும் ஜூலியட் பெற்றோர் கூறுகையில் “சுயநினைவிற்கு வந்த ஜூலியட் தன்னிடம் நடந்த விவரங்களை கேட்டு ஆச்சரியம் கொண்டார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எனது மகளைப் போன்று இதுவரை யாரும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் எங்கள் கண்முன்னே எனது மகள் இப்போது உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிறுவயதிலேயே இறப்புவரை சென்று கால் தடம் பதித்து விட்டு திரும்பி வந்த ஜூலியட்டின் வாழ்க்கை கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.