சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி 297 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்துவதாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டாம் மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடவில்லை. மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மாணவர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களெல்லாம் மீண்டும் ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களும், அவர்களது குடும்பத்தாருக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும்.
கடந்த ஆண்டு இது போன்ற சூழலில் கோர்ட்டு தலையிட்டு தேர்வுகளை ரத்து செய்ததுடன், மதிப்பெண்களை மாற்று முறையில் வழங்கவும் அறிவுறுத்தியது. அது போன்று இந்த ஆண்டும் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 297 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.