கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர் ஒரத்தூர் பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. இந்த ஆற்றில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளாக மாறிவிடுகிறது. அதனைத் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13 நூற்றாண்டுகளில் 45க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கும் தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் இஞ்சி உள்ளது. மேலும் மீதி உள்ள குளங்கள் காணாமல் போயும் தடுப்பணைகள் உடைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வெள்ளப்பருக்கு மூலம் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வழிகிறது. கடந்த 9 ஆம் தேதி நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரத்துப்பாளையம் அணைக்கு 4230 கன அடி நீர் வரத்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக நீர் வரத்து குறைந்து தற்போது 630 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு 15 டிஎம்சிக்கு மேல் இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடைக்கப்பட்ட தடுப்பு அணைகள் மூலம் அருகில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளது. இவ்வாறு உடைந்த தடுப்பணைகள் பொதுப்பணித்துறை ஆவணங்களில் இருக்கிறதா என்பது கூட தெரியாத நிலையில், பயன்பாட்டில் இல்லாத தடுப்பணைகள் குறித்து ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள குளங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.