தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாள் என்பதால் தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.
மேலும் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிர் இழந்ததால், அவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இன்றைய நாள் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட 13 பேருக்கும் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் இழப்பீடுகள் வழங்கப்படுவது ஆறுதலை அளித்தாலும், துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி வழங்குவதும், எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதே கொல்லப்பட்ட 13 உயிர்களுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று அவர் கூறியுள்ளார்.