13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினர் சார்பில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் மாணவிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளனர். அப்போது 9, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாக பெரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியரான பரமக்குடியை சேர்ந்த ஆல்பர்ட் வளவன் பாபு, சமூகவியல் ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் சேதிராயனேந்தல் பகுதியை சேர்ந்த ராமராஜா ஆகிய இருவரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், செல்போனில் தொடர்பு கொண்டு பேசியும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை நலகுழு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மேற்கண்ட ஆசிரியர்கள் இருவரும் சுமார் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தை நலக்குழு அலுவலர் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 2 ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆசிரியர் ராமராஜாவை மதுரையில் வைத்து போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள ஆல்பர்ட் வளவன் பாபு வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.