சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் துலிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை வைத்துள்ளார். இந்நிலையில் துலிப் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிள் புகைப்படத்துடன் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த பலர் துலிப்பை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவ்வப்போது துலிப் வெளியே சென்று விடுவதால் மோட்டார் சைக்கிளை வாங்க வருபவர்கள் பார்ப்பதற்காக வீட்டு காவலாளியிடம் சாவியை கொடுத்து வைத்துள்ளார். நேற்று துலிப்பின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்க்க வேண்டும் என செல்போன் மூலம் துலிப்பிடம் தெரிவித்துள்ளார்.
அந்த சமயம் அவர் வெளியே இருந்ததால் காவலாளியிடம் சாவி இருப்பதாகவும், அதனை ஓட்டி பார்க்குமாறும் தெரிவித்துள்ளார். அதன்படி காவலாளியிடம் இருந்து சாவியை பெற்றுக் கொண்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்து வருவதாக காவலாளிடம் தெரிவித்து சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த காவலாளி துலிப்பிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதுகுறித்து துலிப் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.