மத்திய பிரதேச மாநிலத்தில் ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 40,000 பறிபோன காரணத்தினால் 13 வயது சிறுவன் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சகர்பூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கிருஷ்ணா. இவரது தந்தை மாவட்ட மருத்துவமனையில் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணாவின் தாயாரும் மாநில சுகாதாரத் துறையின் கீழ் செவிலியராக மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். 13 வயது சிறுவன் கிருஷ்ணா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர்.
கிருஷ்ணாவின் பெற்றோரும் ஆன்லைனில் பாடம் பயில்வதற்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆன்லைனில் பிரீ பையர் கேம் விளையாடி வந்துள்ளார். ஆர்வமாக விளையாட அவன் மிகவும் அடிமையாகி பணம் கட்டி விளையாடும் அளவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ணாவின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்ற நேரத்தில் கிருஷ்ணாவின் தாயாருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இதை பார்த்து கோபமடைந்த அவர் ஆன்லைனில் விளையாடுவதற்காக பணத்தை செலவழித்து விட்டதாக கூறி கிருஷ்ணாவை தொலைபேசியில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த கிருஷ்ணா கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த சிறுவன் எழுதிய கடிதத்தில் “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, மன அழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். பிரீ பையர் இல் நான் 40,000 வரை செலவழித்து விட்டேன். அழாதீர்கள் அம்மா” என்று கூறி எழுதியுள்ளார். இந்த கடிதத்தை பார்த்து அவரது தாய் கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.