புதுச்சேரியில் உள்ள அக்கார்டு ஓட்டலில் புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிம்பர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை ஆகியோர்கள் சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாடு தகவல் இதழ் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி புகையிலை கணக்கெடுப்பு தகவல் இதழை வெளியிட்டார். இந்த உலக இளைஞர் புகையிலை கணக்கெடுப்பின் படி, புதுவையில் 13-15 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 4.3% புகைக்கும் அல்லது மெல்லும் வகை புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
புகையிலை இல்லா வழிகாட்டு நெறிமுறைகளை 63.6% பள்ளிகள் பின்பற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் 45.5% பள்ளிகளில் ‘புகையிலை இல்லா பள்ளிக்கூடம்’ என்ற தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் 59.1% பேர் மூடப்பட்ட பொது இடங்கள் மற்றும் 59.1% பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்று அந்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.